யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்!!, மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும் : வி.மணிவண்ணன்

யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியப் பேரவை யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியினைச் செலவிட்டு தனது பயன்பாட்டிற்கு என கொள்வனது செய்யப்பட்ட வாகனத்தினை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவகையில் ஏலத்தில் விற்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின்
யாழ் மாநகர வேட்பாளர்களை ஆதரித்து அரியாலைப் பிரதேசத்தில்உரையாற்றியபோதே இவ்வா குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் எங்களது உரிமைப் போராட்டத்தை முன்கொண்டு செல்லாது கைவிடுவோமாக இருந்தால் நாங்கள் சிங்களவர்களாகவும் பௌத்தர்களாகவும் மாற்றப்படுவோம். எங்களைச் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல இன அழிப்பு எங்களுடைய கலாசாரம் வாழ்வியல் பண்பாடு பொருளாதாரம் என யாவற்றையும் அழிப்பதும் இன அழிப்புத்தான்.

சிலாபம் பகுதியிலே இன்றும் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றார்கள் அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது. தமிழர்களாகிய அவர்கள் மெது மெதுவாக சிங்கள மொழி பேசுபவர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் முழுமையாக பௌத்த மயமாகிவிட்டார்கள். புத்தளத்திலும் அந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பிரதேசங்களில் ஒரு இன அழிப்பு நடந்துவிட்டது. எங்களுடைய தாயகப் பிரதேசங்களை நீங்கள் பார்த்தால் அது சிலாபம் வரை நீண்டு செல்கின்றது.

அதேபோல வடக்கு கிழக்கிலும் வெகு விரைவாகச் செய்யதற்காக முனைப்புக்கள் எங்களது தலைமைகள் எனக் கூறிக்கொள்கின்ற தரப்புக்களின் ஒத்துளைப்புடனேயே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களது உரிமைப் போராட்ட அரசியல் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படவேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரே தரப்பாக நாங்கள் காணப்படுகின்றோம்.

எனவேதான் தமிழ் மக்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் மக்களிடம் கேட்கின்றோம். எங்களுடைய கலாசாரம் வாழ்வியல் பண்பாடு பொருளாதாரம் என்பவை பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அந்த மண் தமிழர்களுடையதாக தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். எனவேதான் நாங்கள் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துகின்றோம்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor