கொழும்பு- யாழ்பாணம் ரயிலை இடைமறித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா, ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து, கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும்போது தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்து, இரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக இவ்வீதியை திறந்து விடுமாறு பிரதமர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலருக்கும் கோரிக்கை விடுத்தும், கோரிக்கை நிறைவேறாத பட்சத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 100-இற்கும் மேற்பட்டவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசத்தில் ஈடுபட முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடும் வகையில் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படாவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor