ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனை கண்டிக்கின்றார் சுரேஸ்!!

தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், ‘ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என குறிப்பிட்டார். இவ்வாறு குறிப்பிட்டமை, ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததென, சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

“தனது கருத்துக்களை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை என்ற மாற்றுக் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் ஆகவே ஊடகங்கள் திருந்த வேண்டும் என்றும் சுமந்திரன் சீற்றத்துடன் கூறியிருக்கிறார். புதிய அரசியல் சாசனம் தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதும், அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இது சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் போன்றோரைச் சீற்றமடைய வைத்திருக்கிறது. தாங்கள் கூறும் கருத்துக்களை மட்டுமே ஊடகங்கள் காவிச் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் ஏனையோரின் கருத்துக்கள் ஊடகங்களில் வருகையில், பதற்றப்பட்டு, அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அளவிற்கு செல்கின்றனர்.

இன்று திரு.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள மிரட்டலைப் பார்க்கின்றபோது இவர் யாருடைய ஆதரவின்பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தமிழ்ச் சமூகமானது ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பல ஊடகவியலாளர்களைப் பலிகொடுத்திருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கினை செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால் அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன் அவர்கள் ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது.

எமது கட்சி இவ்வாறான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடக சுதந்திரம் என்றென்றும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றது” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor