மண்டியிட்டு மாலையணியும் அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை

பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தமை யால் மரணத்தை தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் அவருக்கு என்றும் இருந்ததில்லையென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார்.

புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்தம் ஊடகங்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அண்மையில் வடமாகாண முதலமைச்சரை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் வழங்கும் வகையில் விக்னேஸ்வரன் நேற்றையதினம் ஊடகங்களுக்கு பதில் அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பதிலிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் எனக் கூறியுள்ளார். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஏதோ விதத்தில் சம்பந்தங் கொண்டிருந்தவன். நாட்டின் மூன்று மொழிகளுடனும், நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்துகொள்ள எனக்குச் சொல்லித்தரக்கூடாது. தெற்குடன் நல்லெண்ணங்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள். தெற்கிற்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறு களைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை.

தம்பி பிரபாகரன் அவர்கள், அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால், மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது. எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது? 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே! பெற்று விட்டோமா? ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் . பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடந்தெரியாது ஆக்கிவிடுவார்கள். நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம்.

ஜெரூஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டுதான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தைய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor