“பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதும் உங்களைப் போன்ற தலைவர்களை நேரடியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே வந்தேன்” என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனை பார்க்க சென்றபோது மஹிந்த உரையாடிய விடயங்களை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் உடற்பயிற்சி செய்து உடம்பை கவனித்துக் கொள்வதாகவும் அதேபோன்று நீங்களும் உடம்பை கவனித்து கொள்ளுங்கள் என மஹிந்த, சம்பந்தனிடம் கூறியுள்ளார்.
“அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் எம்பிடையே காணப்படலாம், கொள்கை முரண்பாடுகள் காணப்படலாம் எனினும் அவற்றினையும் தாண்டிய மரியாதையினையும், நட்பையும் உங்கள் மீது நான் வைத்துள்ளேன்” என மஹிந்த, சம்பந்தனிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் வேறு தனிப்பட்ட நட்பு வேறு, உங்கள் உடல்நிலை குணமடைந்த பின்னர் மீண்டும் ஆறுதலாக சந்திப்போம் எனக் கூறியுள்ள மஹிந்த, உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
குறித்த சந்திப்பில் மஹிந்தவின் புதல்வனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் உடல் நலம் தேறியுள்ள நிலையில் நேற்று அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.