வடக்கு முதல்வரின் குரல் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்து ஒலிக்க வேண்டும்

நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தை இழந்து நிற்கின்ற நிலையில், அந்த நிலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் வடக்கு முதலமைச்சர் இனி எமது மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு நல்லதொருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்று கூறியிருந்த நிலையிலேயே மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்கள் பரவிவருகின்றன.

அவரது உரை, வடமாகாண முதலமைச்சரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவிட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும் திட்டம் கட்சிக்குள் நிலவுகிறதா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் மக்கள் தெரிவிப்பதாவது, ”முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது சேவையை வட பகுதி முழுவதற்கும் செய்வதையே தாங்கள் விரும்புகின்றோம்.

கிழக்கிற்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை வடக்கிற்கு ஏற்படாது ஒரளவாவது பெரும் தடுப்பு அரணாக விக்னேஸ்வரனே காணப்படுகின்றார். அவரே தொடர்ந்தும் வடமாகாண சபைக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசியத்தை இழந்து ஐக்கிய தேசியத்துடன் ஒன்றிணைந்துள்ள நிலையில், முதலமைச்சருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேணடும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor