இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி

தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச் சதத்தால், இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, இந்தியாவை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி களமிறங்கிய இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பம் முதல் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 153 பந்துகளில் 13 பௌண்டரிகள், 12 சிக்ஸர்கள் என வாணவேடிக்கை காட்டி 208 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் போட்டியில் ரோஹித் பெற்றுக்கொண்ட மூன்றாவது இரட்டைச் சதம் இது.

மொஹாலி அரங்கில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். மேலும் அதிக ஓட்டம் குவித்த அணித் தலைவர் வரிசையில் இரண்டாவது இடத்தையும் ரோஹித் பெற்றுக்கொண்டார். 219 ஓட்டங்களுடன் வீரேந்தர் சேவக் இன்னும் முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த தவான், ஷ்ரியாஸ் ஐயர் ஆகியோரும் தம் பங்குக்கு முறையே 68 மற்றும் 88 என ஓட்டங்களைக் குவித்தனர். நட்சத்திர வீரர் தோனி ஏழு ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.

மொத்தமாக ஐம்பது ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கட்களை மட்டுமே இழந்து 392 ஓட்டங்களைக் குவித்தது.

இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இலங்கை அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் தமது விக்கட்களைப் பறிகொடுத்தனர். 62 ஓட்டங்களைக் குவிப்பதற்குள் மூன்று விக்கட்களைச் சரித்தனர் இந்தியப் பந்துவீச்சாளர்கள்.

அஞ்சலோ மத்யூஸ் மட்டும் நிதானமாக விளையாடி சதம் (111) தொட்டார்.

ஐம்பது ஓவர்களில் 8 விக்கட்களை இழந்த இலங்கை அணி 251 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதனால், இந்திய அணி 141 ஓட்டங்கள் மற்றும் 4 விக்கட்களால் போட்டியை வெற்றிகொண்டது. ரோஹித் ஷர்மா சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.

5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன. மூன்றாவது போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor