வடமாகாண சபையினர் முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்கள்: தவராசா

வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அதிகூடிய அதிகாரப்பகிர்வு வேண்டும், சமஷ்டி வேண்டும் என்றெல்லாம் கோஷமிடுகின்றோம். இந்த ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு கோஷமிடுவதில் எந்தவித பயனுமில்லை.

அரசிலிருந்து நிதி பெறும் விடயத்தில் மட்டுமல்ல எம்மை நோக்கிவருகின்ற வெளிநாட்டு முதலீடுகளையும் தடுப்பதிலேயே வல்லுநர்களாக இருக்கின்றோம்.

கடல் நீரை நன்னீராக்கி அதனை பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளிற்கு விநியோகம் செய்ய தனியாரினால் எடுக்கப்பட்ட முயற்சி இன்று எமது முதலமைச்சரினால் முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.

32 மில்லியன் அமெரிக்க டொலரில் இந்தத் திட்டம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில், மருதங்கேணி பிரதேச செயலாளரினால் தடுக்கப்பட்டன. இவ்வாறு நாம் தடையாக இருந்தோமேயானால் ஒரு முதலீட்டாளரும் வடமாகாணத்திற்காக முதலீடு செய்வதற்கு வர மாட்டார்கள்.

வடமாகாணத்தில் தடுக்கப்பட்ட திட்டத்தை அம்பாந்தோட்டையில் மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு தற்போது அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, எமக்கு கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தெற்கிற்கு அனுப்பினோம் என்ற சரித்திரம் படைத்த மாகாண சபையாக இந்த மாகாகண சபை அமையப் போகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.

இவ்வாறே எமது பிரதேசத்தை நோக்கிவரும் ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்புகளையும் சுற்றுச் சூழல், அடிப்படை உரிமைகள் என்று நாங்கள் தட்டிக் கழித்துக் கொண்டு போனால் எமது பிரதேசம் எப்போது அபிவிருத்தி காணப்போகின்றது.

வடக்கில் மட்டும் வேலை இல்லாமல் இருக்கும் ஏறத்தாழ 75 ஆயிரம் இளம் சமுதாயத்தினருக்கு நாம் என்ன ஏற்பாடு செய்துள்ளோம் அல்லது என்ன செய்யப் போகின்றோம்.

2014இல் இத் திட்டத்தினை நீங்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இத்திட்டங்களில் பெரும்பான்மையானவை இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு யாழ் மாநகர சபை இன்று ஓர் சுத்தமான மாநகர சபையாக இருந்திருக்கும்“ என்றார்.

Recommended For You

About the Author: Editor