மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : முதலமைச்சர்

2018 ஆம் ஆண்டுக்குரிய மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. இதன்போது, 2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாற தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“முதலாவது வட மாகாணசபையின் 5ஆவதும் கடைசியுமான வரவு – செலவுத் திட்டம் இதுவாகும். மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையில் எமக்கு உதவிகள் வழங்க முன்வருகின்றது. வடமாகாணத்தை எவ்வாறு நோக்குகின்றார்கள் தெரிந்து எமது பிரதேசத்தை வளப்படுத்த வேண்டும், விருத்தி செய்ய வேண்டும்.

“வட மாகாணப் பொருளாதார விருத்தியில் எமக்கு உடன்பாடில்லை. வந்தவற்றை எடுத்தெறிகின்றோம் என்று கூறுகின்றார்கள். அதிகாரப் பகிர்வு கூட பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே எம்மால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். ஆகவே பாரிய செயற்றிட்டங்களை நாம் இயற்றவில்லை. பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என்பவர்கள், அரசியல் ரீதியாக எமக்குத் தகுந்த அதிகாரங்கள் கிடைக்கும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

“2018ஆம் நிதியாண்டுக்கான எமது மாகாணசபை செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவால் தேசிய பாதீட்டுத் திணைக்களத்திற்குச் சிபார்சு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை உள்ளடங்கலாக 2018 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றின் ஒதுக்கீட்டு தொகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு,

மீண்டுவரும் செலவினங்கள் (ரூ.22,910.93மில்லியன்)

மீண்டுவரும் செலவினங்களுக்கான தொகை, 22,770.93மில்லியன் ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசாங்கத்தால் தொகுதிக் கொடையாக, 18,650.93மில்லியன் ரூபாய், மத்திய அரசாங்க வருமானமாக, 2,750மில்லியன் ரூபாயும் மாகாணசபை வருமானமாக, 750மில்லியன் ரூபாயும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றேன்.

“உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் – 480 மில்லியன் ரூபாய், நீதிமன்ற தண்டப்பணம் – 140 மில்லியன் ரூபாய், உள்ளூராட்சி மன்றங்களுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டண மீளளிப்பு – 140 மில்லியன் ரூபாய், மேலும் 2017ஆம் ஆண்டு வரை உள்ளூராட்சி மன்றங்களின் பொருட்டு சேகரிக்கப்பட்ட முத்திரைத் தீர்வைக் கட்டணத்ததை உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு 2018ஆம் ஆண்டில் மாற்றல் செய்வதற்கு நிதி ஆணைக்குழுவின் சிபாரிசு – 480 மில்லியன் ரூபாய்க்கு மேலதிகமாக 140 மில்லியன் ரூபாய் 2018ஆம் ஆண்டு நிதிக்கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மூலதனச் செலவினங்கள் (ரூ.3,843.12 மில்லியன்)

மூலதனச் செலவினங்களுக்கான தொகை, 3,823.12 மில்லியன் ரூபாயாகும். இதில் பிரமாண அடைப்படையிலான கொடை – 551.2 மில்லியன் ரூபாய், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை – 2,829.87 மில்லியன் ரூபாய், பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டம் – 55 மில்லியன் ரூபாய், சுகாதாரத் துறை அபிவிருத்திக் கருத்திட்டம் – 324.80 மில்லியன் ரூபாய், வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு – .62.25 மில்லியன் ரூபாய் ஆகும்.

இதில் வடக்கு வீதி இணைப்புத்திட்டம் (மேலதிக நிதியிடல்) – 17.25 மில்லியன் ரூபாய், பொதுக் கல்வி நவீனமயமாக்கல் கருத்திட்டம் – 45 மில்லியன் ரூபாய், காற்றாலைத் திட்டத்தின் படி விவசாய அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு கொடை – 20 மில்லியன் ரூபாய் ஆகும்” எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor