அதிகாரப்பகிர்வை பெரும்பான்மையினருக்குள் அடக்க அரசாங்கம் முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மக்கள் யாவற்றிற்கும் தெற்கையே நம்பியிருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் இலங்கை மத்திய அரசு விரும்புகின்றதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும் இறுதியுமான வரவு செலவுத் திட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பித்த முதல்வர், தமது ஆரம்ப உரையில் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை பற்றி பேசும் பலர், பிரதேசத்தை வளப்படுத்த வேண்டும், விருத்தி செய்ய வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்பதிலும் பார்க்க தமக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் முன்வைத்துள்ளார். இதனால், அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ள விடயங்களையும் மாவட்ட செயலாளர்கள் ஊடாகவே நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

உலக நாடுகள் தரும் நிதியைக்கூட அரசியல் நன்மைக்காக பயன்படுத்துகின்றனர் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவுப் பகுதி முன்னேற்றத்திற்கென ஒரு பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் ரணில் வகுத்துள்ளதாகவும், அதுபற்றி தமது கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வருவதற்கு முன்னர் செயற்பட்டவாறே இப்பொழுதும் செயற்பட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்ட முதலமைச்சர், வடக்கு மக்கள் நாட்டிய மரங்களுக்கும் வனவள திணைக்களம் உரிமை கோருகின்றதென சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வன்னியின் பறவைகள் சரணாலயத்தில் பாரிய விடுதி கட்டுவது, 500 ஏக்கர் – 600 ஏக்கர் நிலத்தில் திறந்த விலங்கு காட்சிச்சாலையொன்றை அமைப்பது போன்ற செயற்றிட்டங்கள், மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுமென சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு உள்ளூர் வளங்களையும் இயற்கை சமநிலையையும் பேணுவதைக் கவனத்திற்கொள்ளாது வருமானம் ஈட்டுவதை மட்டுமே மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளதென குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், இந்த நடவடிக்கையினால் உள்ளூர் மாகாண ஆட்சியின் கை தளர்ந்து விடும் என்றும், எனவே இவை சம்பந்தமாக மிகவும் அவதானத்துடன் கடமையாற்றி வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor