வெளிநாடு செல்லும் மக்களுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரிக்கை!

தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்ல முற்பட்ட பலர் ஏமாற்றப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பொலிஸார் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றில், குடும்பத்திலுள்ள மூவர் இந்தியாவுக்கு செல்வதற்காக, ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் ரூபா தரகருக்கு வழங்கியுள்ளதாக, கூறியுள்ளனர்.

எனினும், குறித்த தரகரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் அறை ஒதுக்கப்பட்டமைக்கான சீட்டு மற்றும் வீசா என்பன போலியானவை என, முறைப்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களும் போலியானவை எனக் கூறியுள்ள பொலிஸார், அதிலுள்ள முகவரியில், அதுபோன்றதொரு நிறுவனம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விடுமுறைக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், குறைந்த பணத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor