யாழில் பேருந்தைத் திருடி சென்ற நபரால் பரபரப்பு!

யாழ். நகரை அண்டிய பகுதியில் சுவாரஸ்யமான முறையில் பேருந்தைத் திருடி சென்ற நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வழமை போன்று சேவையில் ஈடுபட்டு யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது.

பயணிகளை யாழ்.நகரில் இறக்கிவிட்டு, நகரை அண்டிய பண்ணைப் பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு சாரதியும் நடத்துனரும் அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தை திறப்பு இன்றி இயக்கி அதனைக் களவாடிச் சென்றுளார்.

சிறிது தூரம் சென்ற போது பேருந்து சகதிக்குள் அகப்பட்டு தொடர்ந்து செல்ல முடியாது மாட்டிக்கொண்டது. அந்நேரம் அந்த வழியாக வந்த வேறு தனியார் பேருந்து சாரதிகள் இருவர், குறித்த பேருந்தினை அவதானித்து பேருந்தின் சாரதி வேறு ஒருவராக இருப்பதனையும் நடத்துனரை காணாததாலும் சந்தேகம் கொண்டு பேருந்தின் சாரதிக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டனர்.

அந்நேரமே சாரதிக்கும் நடத்துனருக்கும் பேருந்து திருடிச் செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து பேருந்துத் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பேருந்து திருட்டு இடம்பெற்றமை அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor