திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

அந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், அமைப்புகளும் ஒருமித்து போட்டியிடுவது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள்ளூராட்சித் தேர்தலில் மறைமுகமாக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து சூசகமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில்,

“தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது.

இன்றைய சூழலில் மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய அர்ப்பணிப்பும் சேவைமனப்பான்மையும் கொண்ட இளைய சமுதாயத்தின் பங்கேற்புடன் கூடிய அரசியற்களத்தின் தேவை பெரிதும் உணரப்படுகின்றது. அதுகாலத்தின் தேவையாகவும் உள்ளது.

நாளைய தலைவர்களாக மிளிரக் கூடிய எமது இளைய சமுதாயம், சமூகத்தோடு இணைந்து செயற்படவும் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களில் தேர்ச்சி பெறவும்,வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக அமைப்புக்களைக் கட்டியமைக்கவும் தமக்கான ஓர் வாய்ப்பைத் தேடிக் காத்திருக்கிறது.

நிர்வாக அனுபவமும் வினைத்திறன் மிக்க ஆளுமைப்பண்பும் பொருந்திய குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற அரசாங்க மற்றும் தனியார்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தமது அனுபவ அறிவை மக்களுக்கான சேவையின்பால் தொடரவும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தத்தமது பிரதேசங்களில் இருக்கக்கூடிய முன்னேற்றகரமான வாய்ப்புக்களையும் அவற்றை சமூகப் பயன்கொண்டவையாக எய்துவதில் இருக்கக்கூடிய சவால்களையும் தமது வாழ்வில் அல்லும் பகலும் சந்தித்து வரும் மக்கள் சேவையாளர்கள் பலர், இயலுமான வகைகளில் தமது திறன்களை ஆக்கபூர்வமாக மடை திறந்து விட விருப்புக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஆண்களுக்கு நிகராக ,பலசமயங்களில் மேனிலையில் நிர்வாகத்திறன் கொண்டும், அன்பும் அரவணைப்பும் மிக்க தமது கரிசனைகளை தத்தமது குடும்பங்கள் கடந்தும் தாம் வாழும் சமூகத்தின் மீதும் அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் எம் சமூகத்தின் முன்னோடிகளாக, முன்னுதாரணங்களாக, இருந்து வருகின்றனர்.

வாழ்வியல் விழுமியங்களும் முன்னுதாரணவாழ்வும் நிறைந்த பெருந்தகைகளை நாம் எமது ஊர்களில் இன்றும் காண்கிறோம். இனத்தின் விடுதலையின் பால் நாட்டம் கொண்டு,விசுவாசமும் நேர்மையும் ஒழுக்கமும் மிக்கஉதாரண மனிதர்களாகத் திகழும், மக்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகள் பலரும் எம்முள் உள்ளனர்.

ஓய்வறியா உடலுழைப்பும் நேர்மைத்திறனும் நிரம்பப்பெற்றதொழிலாளர்கள் தமது பயனுறு சக்தியை தாம்சார்ந்த சமூகங்கள் பலன்பெறவும் மானுட விடுதலையின்பால் தமது உழைப்பைப் பகிர்ந்த கொள்ளவும் வேகங் கொண்டுள்ளனர்.

இத்தகைய ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பை ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான வழியில் எடுத்துச் செல்லும் ஓர் வாய்ப்பாக–எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களிற்கான தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வது தமிழ்ப் பிரதேசங்களில் பொதுமக்களின் பங்கேற்புக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்புக்களை மக்கள் தளத்திலிருந்து கட்டியெழுப்புவதற்கு உதவும் என தமிழர்தரப்பின் பலதளங்களிலிருந்தும் எழுந்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை கவனத்திற் கொள்கிறது.

உயரிய நோக்கங்கள் கொண்ட அரசியல்போராட்ட வழிமுறையில், சமூகத்தின் அடித்தள அமைப்பிலிருந்து அதற்கான பயிற்சிக் களங்களைத் திறப்பதும், அரசியலிலும் நிர்வாகக் கட்டமைப்புக்களிலும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க கூடிய வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதும்,காலத்தின் தேவை அறிந்த உத்தியென்ற புத்திஜீவிகளின் ஆலோசனையை தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக் கொள்கின்றது.

பகிரங்கத்தன்மையான, திறந்த, திறன்மிக்க அதிகாரப் பொறிமுறையை அடித்தள அமைப்புக்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஊழலற்ற, அதிகாரப் போட்டிகளற்ற, மக்கள் சேவை என்ற மகுடத்திற்குள் நின்று நிலைபெறக்கூடிய நிர்வாகங்களை ஊரகஅளவில் உருவாக்கிக் கொள்ளவுமான ஒருவாய்ப்பைமிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் மூலம் பெறமுடியுமானால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், ஒத்த சித்தனைகளுடன் பயணிப்பவர்களுடன் அதற்காக கைகோர்த்துக் கொள்ளவும் தமிழ் மக்கள் பேரவை தயாராக உள்ளது.

இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor