ஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்தத்தினால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இலங்கைக்கு வெளியே வாழும் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் ஒரு வலையமைப்பாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் பல வழிகளில் நிதிதிரட்டுவதுடன், பல்வேறுபட்ட நாடுகளில் அமைப்புகளான ஒன்று சேர்ந்து ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்க கனவு காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அந்த முயற்சிகளை மீண்டும் முறியடிப்பதற்கு நாம் ஒன்றுப்பட வேண்டிய அவசியம் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் முப்படையினரை தரக்குறைவாக நடத்துவதாக சிலர் கூறுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு இராணுவத்தை காட்டி கொடுக்க போவதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சிலர் அரசியல் மேடைகளில் தெரிவிப்பதாகவும், அவ்வாறு இடம்பெறபோவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேபோல் ஒருசில இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவே அந்த தடைகளை நீக்கிக்கொள்ள தந்திரமாகவும், படிபடியாகவும் முயற்சிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

Recommended For You

About the Author: Editor