மலேரியா நுளம்புகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை : டெங்கு ஒழிப்புக்கு விசேட வேலைத்திட்டம்

டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.

இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேரியா நுளம்புகள் காணப்படும் கிணறுகளில் அவற்றை இல்லாதொழிப்பதற்காக மீன்குஞ்சுகள் மற்றும் அவேற் என்னும் திரவம் கலக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மலேரியா நோய் தொடர்பில் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில் ,

மீண்டும் இரண்டு நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

வடபகுதியில் தற்பொழுது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் நுளம்புகளின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக இந்த விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த இரண்டு நாள் வேலைதிட்டத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இம்முறையும் வாகனத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதுடன், புகை விசிறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெங்கு நுளம்பு பரிசோதனைகள் தொடந்தும் வடமாகாணத்தில் நடைபெற்று வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் இடம்பெற்ற டெங்கு தடுப்பு நடவடிக்கையில், யாழ்ப்பாணத்தில் 790 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் 259 இடங்கள் டெங்கு அனர்த்தத்தை கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் டொக்டர் ஜி. ரஜீவ் தெரிவித்தார். டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் இருப்பிடங்களை வைத்திருந்த 104 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் போது தெல்லிப்பளை பிரதேசத்தில் அதிகளவில் டெங்கு குடம்பிகள் பரவுவதற்கான சுற்றாடல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor