கிளிநொச்சி சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்ற கோரிக்கை!

கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக பயனாளிகள் பூநகரி சமுர்த்தி வங்கிக்கு வருகைத் தந்துள்ளனர்.

அதன்போது, அவர்களை சில மணிநேரம் காத்திருக்க வைத்துவிட்டு, பின்னர் பணம் இல்லை என குறிப்பிட்டு, வங்கி வளாகத்திலிருந்து வெளியே செல்லுமாறு பயனாளிகளை அதிகார தொனியில் முகாமையாளர் வெளியேற்றியுள்ளார்.

இதனால், தூரப் பிரதேசங்களில் இருந்துவந்த வயோதிபர்களும், பெண்களும் கைக் குழந்தைகளுடன் திரும்பிச் செல்வதற்கு பணம் இன்றி பிறரிடம் கையேந்தி வீதியில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.

குறித்த முகாமையாளரில் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், எவ்வித பயனும் இல்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முகாமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட மட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பயனாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே வங்கி முகாமையாளரை இடமாற்றுமாறு கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor