கடற்படைக்கு சாதகமாக நில அளவீடு? : மக்கள் சந்தேகம்

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம் காணப்பட்ட எல்லைக் கற்களை வேறு இடங்களுக்கு மாற்றி, கடற்படையினருக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கவே இவ்வாறு ரகசியமாக காணிகளை அளவிடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு இடம்பெறுமாயின், தமது பூர்வீக நிலம் தமக்கு இல்லாமல் போகும் ஆபத்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் இரணைதீவு காணியை மீட்பதற்காக கடந்த 178 நாட்களாக இம் மக்கள் போராடி வருகின்றனர். இம் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இப்பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் பின்னர், நில அளவீட்டிலும் தொடர்ந்து இழுபறி காணப்பட்டு வந்த நிலையில், தற்போது அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீட்டில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor