ஆர்ப்பாட்டம் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்!!

யாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்

2017.10.08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் முக்கியமானவர் இப் பகுதியிலுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி ஆவார். இவர் கடந்த சில காலங்களாக வைத்தியசாலைக்கு வந்திருந்த போது இவர்மீது பல்வேறு முறைபாடுகள் காணப்பட்டன. எனவே இவர் மீதான முறைப்பாடுகளைப் பதிவு செய்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உரிய விசாரணை மேற்கொள்ளும் படி அனுப்பியிருந்தோம். அதன் பிரகாரம் இப்போது அந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிரவும் நீதி அமைச்சுக்கும் இவர் இந்த கடமைக்கு பொருத்தமற்றவர் எனவே அவரை வைத்தியசாலைக்கு திடீர் மரண விசாரணைகளுக்காக அனுப்பவேண்டாம் எனவும் கேட்டு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். அதற்கான விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அறிந்திருந்தோம்.

இச்சந்தர்ப்பதில் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இருப்பது அவர் தன்மீது இருக்கும் குற்றச்சாடடுக்ளை மூடி மறைப்பதற்கு என்றே நான் நம்புகின்றேன். குறிப்பாக கடந்த 3 வாரங்களுக்கு முன் சுகாதார அமைச்சின் செயலாளரின் விசாரணைக் குழு இங்கு வந்த போது குறிப்பிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்திருந்தார். எனவே அவர் விசாரணையில் இருந்து விடுபடுவதற்கு போலியான இவ் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார் என்றே நம்பப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோரிக்கைகளை துண்டுப்பிரசுரம் மூலமாக அறியத் தந்துள்ளார்கள். அவற்றில் பல முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. ஒரு சில குறைபாடுகள் வைத்தியசாலை பற்றி கூறப்பட்டுள்ளன. அவை எம்மால் பரிசீலனை செய்து நிவர்த்தி செய்யப்படும். எமது வைத்தியசாலை மீது வந்த பாரிய குற்றச்சாட்டுகள் எவையும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. குறிப்பாக எமது வைத்தியர்கள், உத்தியோத்தர்கள் சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான குறைபாடுகள் எதுவும் எமது வைத்தியசாலையில் இல்லை. குறிப்பாக ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் பொது மக்கள் நேரடியாக அல்லது எழுத்து மூலமாக எமக்கு அறியத்தரும் போது பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் இவ்வாறன செயற்பாடுகள் நடைபெற்றன.

குறிப்பிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இவ் வைத்தியசாலையில் மாத்திரம் அல்லாது ஏனைய அரச அலுவலகங்களுக்கும் சென்று பல கலகங்களை விளைவித்தவர். இவ்வாறான கலகக்காரரினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பற்றி பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஏனெனில், யாழ் போதனாவைத்தியசாலையானது வட மாகாணத்தின் முக்கியமான வைத்தியசாலை ஆகும். வட மாகாணத்திலுள்ள அனைத்து பொது மக்களுக்கும் சேவை வழங்கும் ஒரு நிறுவனாகும். எனவே இந்த நிறுவனம் தொடர்பான தவறான கருத்துக்களையும் சேறு பூசும் நடவடிக்கைகளையும் பற்றி பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

வைத்தியசாலை அனைவருக்கும் சொந்தமானது. அதன் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் அனைவரும் பங்களிக்க வேண்டும். ஆகவே பொது மக்கள் அனைவரும் இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடும் விழிப்புணர்வோடும் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக இந்தச் செய்தி வலைத்தளங்களுடாக பொது மக்களைச் சென்றடைய வேண்டும்.

வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி
பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை.

Recommended For You

About the Author: Editor