ஆஸி. தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்!

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட சுஜன் செல்வன் (வயது – 31) என்பவரே ஆஸி. தேர்தல் களத்தில் இறங்கவுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு அகதி அந்தஸ்து கோரி ஆஸி. சென்ற இந்த இளைஞன், தற்போது மனித உரிமை ஆர்வலராகவும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன் சார்ந்த விடயங்களில் செயற்படுபவராகவும் உள்ளார்.

இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களின் குரலாக நாடாளுமன்றில் ஒலிக்க, எதிர்வரும் தேர்தலில் சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரோஸ்பெக்ட் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளில் முன்னின்று குரல்கொடுக்கும் ஒரு கட்சியாக பசுமைக் கட்சி திகழ்வதாலேயே, தாம் அக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக சுஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஏற்கனவே அவுஸ்ரேலிய தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor