வெற்றிடங்களை நிரப்ப தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த 2015 அல்லது 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் தோற்றி மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரி 18 தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் திருமணமாகாதவராகவும் இருத்தல் அவசியம் விண்ணப்ப படிவங்களை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளன.

இதுவரை பெண்கள் 95% தாதிய உத்தியோகத்தராகவும் ஆண்களை 5% தாதிய உத்தியோகத்தராகவும் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை அதிக அளவில் ஆண்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்தின் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தாதிய உத்தியோகத்தரின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட உள்ளது. வடக்கு மாகணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சனைக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்பதால் விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் இதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் வடக்கில் உள்ள இளைஞர் யுவதிகள் இதற்கு விண்ணப்பித்து நியமனம் பெறுவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற வெற்றிடங்களை நிரந்தரமாக நிரப்ப முடியும்.

இதனால் எமது மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற தாதிய உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய முடியும். ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கு வருகின்ற பெரும்பாலான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்” என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor