சுகாதார சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் அண்மையில் நாரஹென்பிட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைவாக மகப்பேறு, சுகாதார கனிஷ்ட அலுவலக உதவியாளர், குடும்ப சுகாதார சேவை அதிகாரி, சுகாதார முகாமைத்துவ சேவை அதிகாரி ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று பிரிவில் ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ்வருடத்தில் 541 பேர் இத்துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சுகாதார கனிஸ்ட அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு 900 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். குடும்ப சுகாதார சேவையில் பத்தாயிரத்து 714 பேருக்கான வெற்றிடங்கள் உண்டு. இருப்பினும் தற்பொழுது எட்டாயிரத்து 601 அதிகாரிகளே பணியாற்றுகின்றனர். மேலும் மூவாயிரம் பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது 624 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களை விரைவாக பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, சுகாதார ஊழியர்களுக்காக உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்காவும் வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor