இலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி சிறையில் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டவர்கள், பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு மாற்றபட்டனர்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தங்களை வெளியிடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கவேண்டும் என்றும் கைதிகள் பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை முதல் இலங்கைத் தமிழர்கள் சிறைக்குள் உள்ள முகாமில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor