காலையில் திறக்கப்பட்ட கதவு பகல்வேளையில் மூடப்பட்டது

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது.

வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதுடன் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள் தனிநபர் சுகாதாரத்தை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக, கேப்பாபுலவு பிரதான வீதி, நேற்று காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வீதி, செவ்வாய்க்கிழமை மீண்டும் மூடப்படும் என்று இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது

இதேவேளை, தமது சொந்த நிலத்தில், மீண்டும் மீள்குடியேற்றப்படவேண்டும், என வலியுறுத்தி அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று (11), 103 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது இவ்வாறிருக்க, காலை ஏழு மணிக்குத் திறந்த அந்த இராணுவ முகாமின் கதவை, இராணுவத்தினர் பகல் 1 மணியளவில் மூடிவிட்டனர். அதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன், தென்னிலங்கையிலிருந்து சென்றிருந்த சமவுரிமை இயக்கம் மற்றும் முன்னிலை சோஷலிஸ கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர், கண்ணகியம்மன் ஆலயத்துக்குள் சென்றுவிட்டதை அடுத்தே, இராணுவத்தினர் கதவை இழுத்து மூடிவிட்டனர். இதனால், உள்ளே சென்றவர்கள் அங்கே நின்றுவிட்டனர். வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor