யாழ்ப்பாணம் வழியாக ஊடுருவி தமிழகத்தை தாக்க சதி!

pakistan-tararestபாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, 8 தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் பல்வேறு மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர்.

கடந்த 2008ம் ஆண்டு, நவம்பரில் பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவி இப்படிதான் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய எல்லைகளிலும், கடல் மார்க்கங்களிலும் பாதுகாப்பு படைகள் விழிப்புடன் செயல்படுவதால் தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இலங்கையை களமாக பயன்படுத்தி தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய உளவுத்துறையிடம் இருந்து மத்திய அரசுக்கு சமீபத்தில் 9 பக்க ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தய்பா சதித் திட்டம் வகுத்துள்ளது. இதற்காக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களில் 8 தீவிரவாதிகளுக்கு கடுமையான ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 4 தீவிரவாதிகள் பஞ்சாப் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலுக்கு களமாக இலங்கை பயன்படுத்தப்பட உள்ளது.

பயிற்சி அளிக்கப்பட்ட 8 தீவிரவாதிகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் உள்ள கடல் பகுதிகளில் தரை இறங்குவார்கள் என்று தெரிகிறது. அங்கிருந்து சிங்கள மீனவர்களின் உதவியுடன் கடல் மார்க்கமாக தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எங்கு, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்கான சதிகளை லஷ்கர் இயக்கம் வகுத்துள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் மற்ற தீவிரவாத அமைப்புகளான சர்வதேச பப்பர் கல்சா, ஜெய்ஷ் இ முகமது, ஜமாத் உத் தவா, லஷ்கர் இ ஜாங்வி, அல் உமர் முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியவையும் முயற்சிக்கின்றன. இந்த தீவிரவாத அமைப்புகள் அனைத்தும், இந்தியாவில் ஊடுருவுவதற்கான புதிய களமாக இலங்கையை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களில், இந்த தாக்குதல் நடத்தப்படக் கூடும். தமிழகத்தில் மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சியின்போது தாக்குதல் நடத்தவும் லஷ்கர் இயக்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சந்தேகத்திற்குரிய 3 பாகிஸ்தானியர்களை அந்த நாட்டு உளவுத்துறை கைது செய்துள்ளது. இலங்கை பாஸ்போர்ட் மூலமாக மும்பை, திருவனந்தபுரத்துக்கு சென்று வந்ததை விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட தென் மாநிலங்களை உஷார்நிலையில் இருக்கும்படியும், பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உஷார் நிலையில் தமிழக போலீஸ்

தமிழக போலீசார் உஷார் நிலையில் இருப்பதாக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகள் மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை குறித்து நேற்று விரிவான விவாதம் நடத்தினர். மேலும், தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து, கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், “தமிழகம் பாதுகாப்பான மாநிலம். இங்கு போலீசார் எப்போதும் உஷார் நிலையில்தான் இருப்பார்கள். கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். இதனால், எந்த அச்சமும் கொள்ள தேவை இல்லை என்றார்.

Recommended For You

About the Author: Editor