பொதுமக்களின் சொத்துக்களை கையளிப்பதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

mahinda-deshpriyaநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை’ என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்.பொதுநூலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது,
வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த 30 வீடுகள் ஜனாதிபதி முன்னிலையில் உரிமையாளர்களிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் இக்கையளிப்பு நிகழ்வினை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என்றும் தேர்தலின் பின்னர் கையளிக்க உத்தரவிடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினர் கையளிப்பதற்கு தடைபோட முடியாது. பொதுமக்களின் சொத்துக்கள் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் சொத்துக்கள் பொதுமக்களிடம் சென்றடைய வேண்டுமென்பதற்காகவே, தனது பாரம்பரிய சொத்துக்காக தான் மறைந்த வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகனும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பதை நினைவுபடுத்துகிறேன்’ என மேலும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது’ என்று அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor